இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக மாற்ற பாஜக முயலுமானால், பாகிஸ்தானுக்கு நேர்ந்த கதிதான் நம் நாட்டுக்கும் ஏற்படும் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசின் மூத்த தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அஷோக் கெலாட், இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு வருகை தந்தார்.
அகமதாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2017ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலேயே காங்கிரஸ் ஆட்சியை அமைத்திருக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் செய்த பிழையால் அது நடக்காமல் போய்விட்டது என்றும் கூறினார்.
இம்முறை குஜராத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அஷோக் கெலாட், தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக மாற்ற பாஜக முயலுமானால், பாகிஸ்தானுக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவுக்கு ஏற்படும் என எச்சரிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
மதத்தை வைத்து அரசியல் செய்வது எளிது என கூறிய அவர், ஆனால், அது மிகவும் ஆபத்தானது என்றார். இந்த ஆபத்தான விளையாட்டைத்தான் பாஜக விளையாடி வருகிறது என கூறிய அஷோக் கெலாட், ஏனெனில் அக்கட்சியிடம் கொள்கைகளோ, திட்டங்களோ இல்லை என விமர்சித்தார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி திரட்டுவது நாட்டை அழித்துவிடும் என கூறிய அஷோக் கெலாட், தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் பாஜகவுக்கு அஞ்சியே தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி உதவியை அளித்து வருவதாகத் தெரிவித்தார். நிதி உதவி அளிக்காவிட்டால் அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்படும் என்ற அச்சத்தால் பாஜகவுக்க அதிக நிதி திரள்வதாகக் குறிப்பிட்ட அவர், மிகப் பெரிய பொருளாதார வலிமையைக் கொண்டுள்ள பாஜகவோடு பிற கட்சிகள் போட்டியிடுவது சமமானது அல்ல என்றார்.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் கடந்த 2017ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/hindu-rashtra-will-turn-the-country-into-pakistan.html