Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan Tamil News: அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும் இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனு தாரராக சேர்த்துக்கொண்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு வைத்த வாதத்தில், இலவசங்களை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்து திட்டங்களையும் இலவசமாக வழங்க கூடாது. இது மக்களை பாதிக்கும் என்று தெரிவித்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதைத் தடுக்க முடியாது என்றும், “இலவசம்” என்றால் என்ன என்பதை வரையறுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார். மேலும், “சர்வதேச சுகாதாரம், குடிநீர் அணுகல், நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான அணுகல் ஆகியவற்றை இலவசங்களாகக் கருத முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியது. அதோடு, இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. அப்படி வழங்கும் கட்சிகளை தடை செய்வது பற்றி ஆலோசிக்க முடியாது என்றும் கூறி வழக்கை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
இந்த வழக்கில் திமுகவும் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நேற்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சி ஊடக விவாதத்திற்கு அழைத்து இருந்தது. அந்த விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம், இலவசங்கள் காரணமாக மக்களின் திறன் வளராது என்று மோடி கருதுகிறார். மக்களின் திறன் அப்படியே இருக்கும். இலவசங்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். மாறாக திறனை, திறமையை வளர்க்க கூடிய நலத்திட்டங்களை அரசு செய்ய வேண்டும் என்று மோடி நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பிடிஆர், “இதை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும். இலவசங்களை கொடுக்க கூடாது என்று எங்காவது சட்டத்தில் சொல்லி இருக்க வேண்டும். அது இல்லை. அல்லது இப்படி சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதார நோபல், பிஎச்டி.. அல்லது இந்த துறைகளில் நீங்கள் எங்களை விட சிறந்தவர் என்று சொல்வதற்கான ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி இதை செய்ய கூடாது என்று சொல்ல முடியும்.
உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம். நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?
ஒன்றிய அரசுக்கு அதிக நிதி தரும் மாநிலங்களில் நாங்கள்தான் மேலே இருக்கிறோம். நாங்கள் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 35 பைசா மட்டுமே எங்களுக்கு திரும்பி வருகிறது. எங்களிடம் இருந்து உங்களுக்கு இன்னும் என்ன தேவைப்படுகிறது? எந்த அடிப்படையில் உங்களுக்காக நாங்கள் எங்களின் பாலிசியை சரி செய்ய வேண்டும். மாற்ற வேண்டும்?” என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்விக் கணை தொடுத்தார்.
தமிழக நிதியமைச்சர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், அவை இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் பேசிய விஷயங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்தியா முழுதும் இருந்து பலரும் அவரையும், அவர் கூறிய கருத்தையும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, ‘இலவசம்’ நாட்டுக்கு ஆபத்தானது என்றும், அது தொலைநோக்கு பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தற்போது விவாத புயலை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-finance-minister-ptr-on-freebie-debate-with-india-today-video-goes-viral-496227/