வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் மரணம்

 

18 8 2022 

Nellai kannan
Nellai kannan

தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆன நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78. நெல்லையில் உள்ள வீட்டில் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பூர்விகமாகக் கொண்ட நெல்லை கண்ணன், காமராசர், கண்ணதாசன் என தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த கண்ணன், தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ் இலக்கியத்தை கற்றுத் தேர்ந்தவர். தனது பேச்சாற்றல் மூலம் பல பட்டிமன்றங்களில் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டவர்.

காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட நெல்லை கண்ணன், இளம் வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர்.

தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர்.

பிறகு, 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார் நெல்லை கண்ணன். ஆனால், அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.

ஒருமுறை, மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இப்படி அரசியலில் தீவிரமாக செயல்பட்டாலும் அவரால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், நெல்லை கண்ண்ணன் தொடர்ந்து, பட்டிமன்றம், இலக்கியம், சமய சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நெல்லைக் கண்ணன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். குறிப்பாக, தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அசுரன் படத்திற்கு இவர்தான் வசனம் எழுதினார்.  2வது மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/nellai-kannan-passed-away-in-tirunelveli-496177/