As its spy ship docks in Sri Lanka port, Beijing says: ‘This is life’: சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் யுவான் வாங் 5 செவ்வாய்க் கிழமை காலை தென்னிலங்கையில் உள்ள வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஆழ்கடல் துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், சீனா தனது கப்பலின் செயல்பாடுகள் எந்த நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும், இந்தியா மற்றும் அதன் பாதுகாப்பு கவலைகளைக் கருத்தில் கொண்டு, எந்த ஒரு “மூன்றாம் தரப்பினரும்” “தடையாக” இருக்கக்கூடாது என்றும் கூறியது.
இந்தியாவின் கவலைகள் மற்றும் சீனக் கப்பலின் வருகை தாமதம் குறித்து கேட்டதற்கு, கப்பல் வருகையின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதர் குய் ஜென்ஹாங் நிருபர்களிடம், “எனக்குத் தெரியாது, இந்திய நண்பர்களிடம் தான் இதை நீங்கள் கேட்க வேண்டும்… எனக்குத் தெரியாது. ஒருவேளை இதுதான் வாழ்க்கை, ” என்று கூறினார்.
கடந்த சனிக்கிழமை, இந்தியா எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து சீன இராணுவக் கப்பலின் வருகையை ஒத்திவைத்த இலங்கை, யு-டர்ன் அடித்து, ஆகஸ்ட் 16 முதல் 22 வரை கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்தது.
யுவான் வாங் 5 ஒரு சக்திவாய்ந்த கண்காணிப்பு கப்பலாகும், அதன் குறிப்பிடத்தக்க வான்வழி கண்காணிப்பு அளவு சுமார் 750 கிமீ. அதாவது கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பல துறைமுகங்கள் சீனாவின் ரேடாரில் இருக்கக்கூடும்.
கப்பலின் வருகை குறித்து இந்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை, கப்பல் வருகைக்கு முன்னதாக, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த சீனாவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
கடந்த வாரம், இலங்கை கப்பல் விவகாரத்தில் யு-டர்ன் அடிக்கும் முன், வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு மற்றும் அதன் சொந்த சுதந்திரமான முடிவுகளை எடுக்கும்” என்று கூறியிருந்தார்.
பெய்ஜிங்கில் செவ்வாயன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், யுவான் வாங் 5 “இலங்கை தரப்பில் இருந்து தீவிர ஒத்துழைப்புடன்” ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் “வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், கப்பல் வந்ததும், சீன தூதர் குய் ஜென்ஹாங் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரவேற்பு விழாவை நடத்தினார் என்றும் அவர் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டில் கடனை மாற்றுவதற்காக சீனா 99 ஆண்டு குத்தகைக்கு துறைமுகத்தை எடுத்துக்கொண்டது.
கப்பல் குறித்த இந்திய மற்றும் அமெரிக்க கவலைகளை குறிப்பிட்டு வாங் கூறுகையில், “யுவான் வாங் 5 இன் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச பொது நடைமுறைக்கு இசைவானவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்றார்.
“அவை எந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்காது மற்றும் எந்த மூன்றாம் தரப்பினராலும் தடுக்கப்படக்கூடாது,” என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவின் பிரதிநிதியும், பத்துக்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் நட்பு சமூகங்களின் தலைவர்களும் கலந்துகொண்டதாக வாங் கூறினார்.
“யுவான் வாங் 5 ஆராய்ச்சிக் கப்பல் தேவையான பொருட்களை நிரப்புவதற்கு சிறிது காலம் எடுக்கும்,” என்று அவர் கூறினார்.
யுவான் வாங் வகுப்பைச் சேர்ந்த கப்பல்கள் செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல்களைக் கண்காணிக்கப் பயன்படுகின்றன. சீனாவின் நிலம் சார்ந்த கண்காணிப்பு நிலையங்களுக்கு கப்பல்கள் துணைபுரிகின்றன.
கடந்த காலங்களிலும், இந்தியப் பெருங்கடலில் சீன ராணுவக் கப்பல்கள் இருப்பதை இந்தியா கடுமையாகக் கருதி, இலங்கையிடம் இவ்விவகாரத்தை முன்வைத்தது.
2014 ஆம் ஆண்டு சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அதன் துறைமுகம் ஒன்றில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதித்ததன் காரணமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னர் அழுத்தத்திற்கு உள்ளாகின.
2017 ஆம் ஆண்டில், இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியாமல் போனதை அடுத்து, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியது.
உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதில் இலங்கையின் பிரதான கடனாளியாக சீனா உள்ளது. சீனக் கடன்களின் கடன் மறுசீரமைப்பு, பிணை எடுப்புக்கான சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் வெற்றிக்கு முக்கியமாகும்.
மறுபுறம், இந்தியா, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையின் உயிர்நாடியாக இருந்து, கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார உதவியை வழங்கியது.
source https://tamil.indianexpress.com/india/as-china-spy-ship-yuan-wang-5-docks-in-sri-lanka-port-beijing-says-this-is-life-495478/