வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் குடும்பத்தார் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
700-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மன்னார்குடி, கோவை என தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 6.30 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும், சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை நடத்துகிறது.
ஜெயா டிவி - நமது எம்.ஜி.ஆர் - ஜாஸ் சினிமாஸ்:
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம், தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீடு, கிண்டியில் உள்ள இளவரசியின் மகன் விவேக்கின் ஜாஸ் சினிமா அலுவலகம், விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், விவேக்கின் 4 சக்கர வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை நடைபெற்று வரும் இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மிடாஸ் ஆலை:
இதேபோல், சசிகலாவின் உறவினருக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரத்தை அடுத்துள்ள படப்பை சிறுமாத்தூர் எனும் கிராமத்தில் மிடாஸ் மதுபான ஆலை இயங்கி வருகிறது.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையில், இன்று காலை 6 மணி முதல் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.