வெள்ளி, 3 நவம்பர், 2017

​அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு! November 2, 2017

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதாகக் கூறினார். அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த இரு தினங்களை பொறுத்த வரை தென் தமிழகத்தில் பல  இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார். 

மேலும் தென் தமிழகம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், தென் தமிழக கடலோர மாவட்டத்திலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் சற்று எச்சரிக்கை உடன் கடலுக்குச் செல்லுமாறு கூறினார். சென்னை நகரை பொறுத்த வரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய பாலச்சந்திரன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வளி மண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்கள் வரை வலுப்பெறாது என்றும், இதே நிலை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார். 

Related Posts: