
கடந்த நவ.8ம் தேதி அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் கருத்து சொல்லி வருகின்றனர். ஆரம்பத்தில் நடவடிக்கையை ஆதரித்து பின்னர் எதிர்த்தவர்கள், முதலில் எதிர்த்து பின்னர் அமைதியானவர்கள் என்று பணமதிப்பிழப்புக்கான விமர்சன பட்டியல் மிக நீளமானது.
தற்போது அந்தப்பட்டியலில் நடிகர் சிம்புவும் சேர்ந்துள்ளார். பணமதிப்பிழப்புக்கான ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கடந்த 8ம் தேதி அவர் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். NO CASH என்பதை பாடலின் அடிநாதமாக வைத்து இயக்கியுள்ளார்கள். பாடலில் கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நேரத்தில் செய்திகளில் காட்டப்பட்ட ஏடிஎம் மற்றும் வங்கி காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்ததைக் குறித்தும் காட்சிகள், வரிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பாடலில் ஜி.எஸ்.டி குறித்தும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு தன்னுடைய பாணியில் பாடி வெளியிட்டிருக்கும் இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது. யூ-ட்யூபில் 7.76 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர்