
டெல்லியில் நிலவும் காற்று மாசு சூழல், ஒரு நாளில் 45 சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதற்கு சமம் என உலக பொருளாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், காற்றில் நச்சு வாயுக்கள் அதிகளவு இருப்பதால் அதனை சுவாசிக்கும் மக்கள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது 45 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானது எனவும், இதனால் இருதய நோய், சுவாச கோளாறு போன்றவை அதிகளவு ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி அரசு அறிவித்துள்ள வாகன கட்டுப்பாடு திட்டத்துக்கு தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த வரும் 13 முதல் 17-ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. எனினும், டெல்லி அரசின் இந்த உத்தரவால் எந்த பயனும் ஏற்படாது எனவும், இதனால் பொதுமக்கள் தான் அதிகளவு பாதிக்கப்படுவர் எனக்கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவசர வழக்காக இன்று விசாரணை நடத்திய நிலையில், டெல்லி அரசின் வாகன கட்டுப்பாடு திட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர ஊர்திகள் நீங்கலாக மற்ற அனைத்து வாகனங்களும் வாகன கட்டுபாடு திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.