செவ்வாய், 14 நவம்பர், 2017

​டாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்! November 14, 2017



டாஸ்மாக் தொடர்பான வழக்கில், தமிழக அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Image
தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், புதிதாக கடைகள் திறக்கப்படுவதாகக் கூறி வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. 

அப்போது, இது தொடர்பான விசாரணை கடந்த முறை நடைபெற்றபோது, மாநில அரசு தெரிவித்த கருத்துக்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு சுட்டிக்காட்டியது. 

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட மற்றும் உள்ளாட்சி சாலைகளாக பெயர் மாற்றம் செய்து அத்தகைய சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க சண்டிகருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதாகவும், இது குறித்து உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெற்று அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை வைத்ததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 

அவ்வாறு இருக்கும் போது, விளக்கம் பெற்று வருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்திருப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்திருப்பது மாநில அரசின் பொறுப்பற்ற 
செயல்பாட்டையே வெளிப்படுத்துவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 

Related Posts: