
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆய்வுகள் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், புதுச்சேரி மற்றும் டெல்லியில் துணைநிலை ஆளுநர்களின் தலையீட்டால் எப்படி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ, அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுருவும் பாஜகவின் பாணி தொடர்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் பழனிசாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுநரின் ஆய்வு உணர்த்துகிறது என்றும், நீட் தேர்வு முதல், தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் பறிபோய்க் கொண்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று அமைச்சர்கள் சொல்வது வெட்கக்கேடானது என்றும், இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய முதலமைச்சர் பழனிசாமி தமது சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.