தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், கிடைத்த ஆவணங்கள் மூலம், வரிஏய்ப்பு தொடர்பான மதிப்பீடு பணிகளை வருமானவரித் துறையினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, தந்தை சின்னதம்பி மற்றும் சகோதரர் ஆகியோரிடம் தனித்தனியாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். மேலும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியை ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றிய சொத்து ஆவணங்களை வைத்து, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் கிடைத்த தகவலை வைத்து, வரி ஏய்ப்பு சம்பந்தமாக மதிப்பீடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரிஏய்ப்பு மதிப்பீடு செய்யப்பட்டு, அது விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்களிடம் உறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.