பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி, விவசாயிகள் தலைஞாயிறு பகுதியில் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களுடன் காப்பீடு நிறுவன அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து வரும் 10ம் தேதிக்குள் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என போலீசார் உறுதியளித்ததால், போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
இதேபோல், பயிர்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து, தஞ்சை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில், கடந்த ஆண்டு ஒருபோக சாகுபடியாக விவசாயிகள் பயிர் செய்த சம்பா பயிரும் தண்ணீரின்றி கருகியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை இன்னும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வேளாண் இணைஇயக்குனர் நெடுஞ்செழியன் பேச்சுவார்த்தை நடத்தி, காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதேபோல், பயிர் காப்பீடு தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து, கோவில்பட்டியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, கடம்பூரில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் கருப்புக்கொடியை அகற்றினர்.
சிவகங்கையில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்துச் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் புளியடிதம்மம் கூட்டுறவு வங்கி, மறவமங்கலம் பாண்டியன் கிராம வங்கி, பெரிய கண்ணனூர் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் பயிர்க் காப்பீடு செய்த 14 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகை 6 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இந்தக் காப்பீட்டுத் தொகையை வழங்காததைக் கண்டித்துச் சிவகங்கை அரண்மனை வாசல் முன் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காப்பீட்டுத் தொகையை வழங்காத அரசு அதிகாரிகள், வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், விரைந்து காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர். மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 150க்கு மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.