
மும்பையில் இந்திய அரசுக்குச் சொந்தமான கப்பல் கடலில் மூழ்கியது. அதிலிருந்த மாலுமிகள் 16 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான ரத்னா என்கிற கப்பல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கடலுக்கடியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
மும்பைக்கு மேற்கே நூறு கடல்மைல் தொலைவில் கடலில் 80 மீட்டர் ஆழங்கொண்ட பகுதியில் அந்தக் கப்பல் மூழ்கிவிட்டது. கப்பலில் ஓட்டை விழுந்து உள்ளே தண்ணீர் புகுந்ததே அது மூழ்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கப்பலில் இருந்த மாலுமிகள் 16பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரத்னா கப்பல் 2,000 டன் எடையும், 64 மீட்டர் நீளமும் கொண்டதாகும்.