புதன், 10 ஜனவரி, 2018

​7வது நாளை எட்டியுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்! January 10, 2018

Image

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 7வது நாளை எட்டியுள்ளது. 

6வது நாளான நேற்று போக்குவரத்துத் தொழிலாளர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பணிமனைகள் முன் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர். 

சென்னையில் பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

போராட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நிச்சயம் பேசுவோம் என்றும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தால், போராட்டத்தை வாபஸ் பெற தயாராக உள்ளதாகவும் கூறினார். 

சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.