souce ns7.tv
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள பாகிஸ்தான் அரசு, அதன் ஒரு பகுதியாக 182 மதராஸாக்களை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோரை தடுப்பு காவலில் வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் 40 CRPF வீரர்கள் பலியான தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளே காரணம் எனவும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் தவறிவிட்டதாக இந்திய அரசாங்கம் குற்றம்சாட்டிவரும் நிலையில் இது முன்னதாகவே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட நடவடிக்கை என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா மீதான தாக்குதல்களை தொடர்ந்து சர்வதேச நாடுகளில் அழுத்தங்களை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மது இயக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
மதராஸாக்கள் எனப்படும் மதத்துடன் தொடர்புடைய பள்ளிகளுக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பினை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முஹம்மது போன்ற தீவிரவாத இயக்கங்கள் மதராஸாக்களை நடத்தி வருவதுடன் அதில் உள்ள இளம் மாணவர்களை மூளைச்சலவை செய்வதாகவும் கூறப்படுகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜமாத்-அல்-தவா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சையதின் சொத்துக்களை நேற்று பாகிஸ்தான் அரசு தன்வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.