வியாழன், 7 மார்ச், 2019

பசியாற்றிக் கொள்ள மண்ணை தின்னும் ஹைத்தி நாட்டு மக்கள்! March 07, 2019

Image
சுவையான உணவுகளுக்காக பலர் விதவிதமான உணவகங்களை தேடிக்கொண்டிருக்கும் சூழலில், ஹைத்தி நாட்டு மக்கள் பசியாற்றிக் கொள்ள, மண்ணை தின்னும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இவர் ஹைத்தியின் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரைச் சேர்ந்த லூயிசெனா ஜோசப். இவர் தனது குடும்பத்துடன் சுடும் வெயிலில் அமர்ந்து, மண் பிசைந்து கொண்டிருப்பது மண் பாண்டங்கள் செய்வதற்கல்ல, மண் கேக் செய்வதற்காக. அது என்ன மண் கேக்? காசு கொடுத்து அரிசியோ, பழங்களோ, காய்கறிகளோ, மாமிசமோ வாங்க முடியாத ஏழை மக்களின் புதிய வகை உணவுதான் மண் கேக்.
மண் கேக் தின்னும் பரிதாப நிலை, லூயிசெனா ஜோசப்பிற்கு மட்டுமல்ல. ஹைத்தி நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களுக்கு தற்போதைய சூழலில் இதுதான் பிரதான, சுவையான உணவு. வீடுகளில் மட்டுமே கிடைத்த மண் கேக், தற்போது வீதிகள் மற்றும் சந்தைகளில் விற்பனைக்கும் வந்துவிட்டன. இந்த உணவு வயிறு சம்மந்தமான சில நோய்களுக்கு தீர்வு தரும் என்று மருத்துவர்கள் கூறினாலும், அது ஆறுதலுக்கான செய்தியாகவே எண்ணத் தோன்றுகிறது.
அமெரிக்க கண்டத்திலேயே ஹைத்திதான் மிகவும் ஏழ்மையான நாடு. இங்குள்ள அரசியல் ஸ்திரமற்றத் தன்மையால், மக்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் கீழ்நோக்கியேச் செல்கிறது. ஹைத்தி மக்களில் பாதிபேர், அதாவது சுமார் 50 லட்சம் மக்கள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வாழ்வதாக, ஐநாவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அறிக்கைகள் தான் அடுத்தடுத்து வருகிறதே தவிர, அந்நாட்டு மக்களின் பசியை ஆற்றும் எந்த திட்டத்தையும், ஐநா-வோ, உலக நாடுகளோ முன்வைத்ததாகத் தெரியவில்லை.  

source ns7.tv