பிரதமர் வருகைக்கு எதிராக கன்னியாகுமரி அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
கருப்பு கொடி போராட்டத்தில் கற்கள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது. பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி அருகே காவல்கிணறு பகுதியில், மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. திறந்தவேனில் வைகோ உரையாற்றிக்கொண்டிருந்த நேரத்தில், மதிமுக தொண்டர்கள் மீது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக மதிமுகவினரும் தாக்கத் தொடங்கியதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தெறித்து ஓடிய மதிமுகவினர் மற்றும் பாஜகவினர் மீது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியடி நடத்தினர்.
அப்போது வேனில் இருந்த வைகோ, தொண்டர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். மதிமுக தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று உரக்க வலியுறுத்திய வைகோ, கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து வேனில் இருந்தபடி மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை வைகோ பறக்கவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்தார்.
source: ns7.tv