தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு அண்மையில் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் மூன்று மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதலை மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. திருப்பூர், உதகை, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை துவங்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி இருந்தது. தற்போது கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகை மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் மாநில சுகாதாரத் துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒப்புதல் அளித்த 6 மருத்துவ கல்லூரிகள் தலா 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் என்றும், அதில் 60 சதவீத செலவினத்தை, மத்திய அரசு ஏற்கும் என்றும், மீதமுள்ள 40 சதவீத நிதியை மாநில அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நிதி திட்டத்தின் கீழ், இந்த 3 கல்லூரிகளும் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை என குறிப்பிடுட்டுள்ளார். இதற்கென 2 ஆயிரத்து 925 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 1,755 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் தமிழக அரசின் பங்காக ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதுவரை வரலாறு காணாத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
credit ns7.tv