
பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உணவு தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக நச்சுத்தன்மை உள்ள பாக்கெட் பால் கிடைப்பதாக அன்மையில் மத்திய அமைச்சர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள்ளாக, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகம் விற்படுவதாக ஆய்வில் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய சுகாதார துறையின் கீழ் இயங்கும் மத்திய உணவு தர கட்டுபாட்டு நிறுவனமான FSSAI, நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை கொண்டு ஆய்வினை மேற்கொண்டது.
நாடு முழுவதும் எடுக்கப்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரம் உணவு மாதிரிகளை சோதனை செய்ததில் 3.7 சதவீதம் உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்றதாகவும், 15.8 சதவீதம் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதும் தெரியவந்தது.
இதில் பாதுகாப்பற்ற உணவுகளை விற்பனை செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட 5730 மாதிரிகளில் 12.7 சதவீத மாதிரிகள் பாதுகாப்பற்றதாக இருப்பது தெரியவந்தது. இதற்கு அடுத்தப்படியாக அசாம் மாநிலத்தில் 8.9 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 8.8 சதவீதமும் பாதுகாப்பற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தரமற்ற உணவுகள் விற்பனை செய்வதில் நாகாலந்து மாநிலம் 86.6 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி தொடர்பாக ஒட்டப்படும் லேபிள்களில் அதிக குளறுபடிகள், தமிழகத்தில் தான் நடப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு தரம் தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டை விட 86 சதவீதம் இந்தாண்டு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களில் உணவு தரக்கட்டுபாட்டு நிறுவனங்களில் உள்ள ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு மற்றும் பரிசோதனை கூடங்களை அதிகரித்தாலே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கிறது இந்த ஆய்வு.
credit ns7.tv