credit ns7.tv
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டணம் காவல்நிலையத்தில் விசாரணை கைதியை அடித்துக் கொலை செய்துவிட்டு, என்கவுன்டர் நாடகமாடிய காவல் உதவி ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டணம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் காளிதாஸ். இவர் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் எஸ்.பி பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது முகமது என்பவரை வாகன திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடந்த என்கவுன்டரில் சைய்யது முகமது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், செய்யது முகமதுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில் செய்யது முகமதுவை உதவி ஆய்வாளர் அடித்துக் கொன்றதும், கொலையை மறைக்க தற்காப்பு என்ற பெயரில் துப்பாக்கியால் சுட்டு நாடகமாடியதும் தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம், காவல் உதவி ஆய்வாளர் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 2 லட்ச ரூபாய் பணத்தை உயிரிழந்த முகமதின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்