மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், உத்தவ் தாக்ரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
அந்த மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் பிடித்ததால், பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கவிருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அஜித்பவார் ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பட்னாவிஸ் பதவி விலகினார்.
இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பதவியேற்றார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை இன்று கூடுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சிவசேனா தலைமையிலான மகராஷ்டிர விகாஸ் முன்னணிக்கு 154 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. 105 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது.
credit ns7.tv