கடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பார்க்கப்படுகிறது. எனினும், அதீத ஆன்லைன் ஷாப்பிங் தற்போது ஒரு தவிர்க்கமுடியாத மனநோயாக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது தற்போது மிகப்பெரிய மனநோயாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் சுமார் 5 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர், Buying-shopping disorder என்கிற இந்த புதிய வகை மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக, லண்டனை சேர்ந்த ”Comprehensive Psychiatry” என்கிற பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஜெர்மனியில் உள்ள ”ஹேனோவர் மெடிக்கள் ஸ்கூலை” சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், இந்த Buying-shopping disorder என்கிற பிரச்னையை, மனநோய்க்குள் கொண்டு வந்து வரையறுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக ஆன்லைனில் பொருட்களை வாங்கிக்கொண்டிருப்பது, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாமல், அளவுக்கு மீறி ஆன்லைனில் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிப்பது, கடன் வாங்கி ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என எந்த நேரமும், இன்டர்நெட்டில் பொருட்கள் வாங்குவதை நினைத்து ஏங்கிக்கொண்டே இருப்பது, இந்த மனநோயின் தீவிர வடிவங்களாக பார்க்கப்படுகிறது.
மகிழ்ச்சியான, முழு திருப்தியான மனநிலையில் நாம் இருக்கும்போது, நம் மூளையில் டோப்பமைன் என்கிற வேதிப்பொருள் சுரக்கும், இந்த வேதிப்பொருள் கொடுக்கும் எழுச்சியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, மீண்டும் மீண்டும் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் இன்பத்திற்கு அடிமையாகுகிறார்கள் வாடிக்கையாளர்கள்.
குடும்பத்தில் கவனம் செலுத்தாமல், எந்த நேரமும் சண்டையிடுவது, வருவாய்க்கு மீறிய செலவினால் துன்பத்திற்கு ஆளாவது, கடன் சுமைக்கு தள்ளப்படுவது, இதனால் பணமோசடியில் ஈடுபடுவது, வாங்கிய பொருட்களை குடும்பத்தாரிடம் இருந்து மறைத்து வைப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு, இந்த ஷாப்பிங் மனநோய் வித்திடுகிறது. இன்டர்நெட்டில் உள்ள பலவிதமான ஏலம் விடும் தளங்கள், மக்களை சூதாட்ட பாணியில் ஷாப்பிங் செய்ய தூண்டுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆடம்பரத்திற்காக, கட்டாயமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை அனுபவிப்பதாலும், இது சுயமரியாதையை உயர்த்துவதாக நினைப்பதாலும், தங்களுக்குத் தேவையேயில்லாத, விருப்பமற்ற, பயன்படுத்த முடியாத பொருட்களை வாங்குவதற்கு இந்த மனநோய் பாதித்தவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள். அதனால்தான் ஆடம்பர காலணிகள், உடல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை, இவர்கள் வாங்கும் பட்டியலில் அடிக்கடி இடம்பெறுகின்றன.
சூதாட்டம், வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாவது, திருடுதலில் அதிக ஆர்வம் காட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை ”உலக சுகாதார மையம்” மன நோயாக அங்கீகரித்தது போல், ஆன்லைன் ஷாப்பிங் பிரச்னையை இதுவரை மனநோயாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், இதற்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது என்றும், அப்படி அங்கீகரித்தால் மட்டுமே இதற்கான சிகிச்சை முறைகளால் நோயாளிகள் பலன் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், என்றும் மனநல மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
credit ns7.tv