சனி, 23 நவம்பர், 2019

பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Image
முரசொலி அலுவலக நில விவகாரத்தில், பாமக நிறுவனர் ராமதாசும், பாஜக மாநில செயலாளர் சீனிவாசனும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாதிய வன்மத்தை கேள்வி கேட்கும் படம் என, 'அசுரன்' திரைப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். அந்த படம், கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பாரா திமுக தலைவர் ஸ்டாலின் என கேள்வி எழுப்பி புதிய சர்ச்சையை தொடங்கி வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். 
இந்த நிலையில், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக புகார் அளித்தார். இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடத்திய விசாரணையில் தமிழக அரசு, திமுக தலைமை மற்றும் சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், முரசொலி அலுவலக இடம், பஞ்சமி நிலம் என தவறான கருத்தை கூறிதாக, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
தவறினால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
credit ns7.tv