வியாழன், 21 நவம்பர், 2019

இஸ்லாமிய பேராசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்!


Image
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பேராசிரியர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத வித்யா தர்மா விஜ்னன் படிப்பிற்கு டாக்டர் ஃபைரோஸ் கான் என்பர் துணை பேராசிரியராக கடந்த நவம்பர் 7ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். சமஸ்கிருத பாடத்திட்டத்திற்கு இஸ்லாமிய பேராசிரியரை நியமனம் செய்தது மாணவர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இஸ்லாமிய பேராசிரியரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் செவ்வாய் கிழமை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பட்நாகர், தர்ணா போராட்டம் நடைபெற்று வரும் பகுதியை கடந்தபோது, அவர் சென்ற கார் மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் சிலர் கல் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசியதாக கூறப்படுகிறது., இந்த தகவலை துணை வேந்தரின் மக்கள் தொடர்பு அதிகாரி உறுதி படுத்தியுள்ளார். மாணவர்களின் போராட்டத்திற்கு வலதுசாரி அமைப்பான ஏபிவிபி ஆதரவளித்துள்ளது.
“எங்களது கோரிக்கைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்டு, டாக்டர் ஃபைரோஸ் கான் வேறு துறைக்கு மாற்றப்படும் வரை எங்களது போராட்டத்தை முடித்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை” என்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அப்பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் சுபம் திவாரி தெரிவித்துள்ளார்.
“அவர்களது கோரிக்கைகள் நியாயமானது. பேராசிரியர் ஃபைரோஸ்கானை வேறு துறைக்கு மாற்றவேண்டும் என்றும், சனாதன தர்மத்தை போதிக்கும் சமஸ்கிருத பாடத்திற்கு இந்து பேராசிரியர் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் பேராசிரியர் நியமனத்திற்கு எதிராக போராடவில்லை. பேராசிரியர் ஃபைரோஸ் கான் வேறு துறையில் பாடம் எடுக்கலாம். எனவே பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்” என்று எபிவிபி தெரிவித்துள்ளது.
சமஸ்கிருத வித்யா தர்மா விஜ்னன் துறையின் டீன் விபி மிஸ்ரா, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் துணை வேந்தருடனான ஆலோசனைக்குப்பிறகு இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தர், டாக்டர் ஃபைரோஸ் கானின் நியமனத்தில் அனைத்துவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
credit ns7.tv