கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இரண்டு வாரங்களுக்கு மேலாக வலுவிழந்து காணப்பட்டது. சென்னையில் பரவலான இடங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. பொன்னேரி, பழவேற்காடு, கும்முடிபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று இரவிலிருந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்ததால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
credit ns7.tv