செவ்வாய், 19 நவம்பர், 2019

எதிர்ப்பை தொடர்ந்து மாநிலங்களவை சபை காவலர்களின் சீருடை மீண்டும் மாற்றம்?

credit ns7.tv
Image
மாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடரை முன்னிட்டு, சபை தொடங்கிய முதல் நாளான நேற்றைய தினம் மார்ஷல்கள் எனப்படும் சபை காவலர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டிருந்தது. 
இது ராணுவ வீரர்களின் உடையை போன்று இருந்ததால் சர்ச்சையானது. ராணுவ வீரர்களின் உடையை போன்றே நீல வண்ணத்தில், ராணுவ தொப்பியில், தோள்பட்டையில் இருப்பதை போன்றே அடையாளச் சின்னங்கள் போன்றவை இருந்தது. 
இது பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல்நிலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சீருடையின் அம்சங்கள் என்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.  
இது தொடர்பாக சபையில் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து முன்னாள் ராணுவ தளபதி வேத் மாலிக் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ராணுவ வீரர்களின் உடையை போன்றே மாநிலங்களவை காவலர்களுக்கு சீருடை வழங்கப்பட்டிருப்பது 
சட்டவிரோதமானது மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவைத்தலைவர் வெங்கைய நாயுடு நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அவரை டேக் செய்து தெரிவித்திருந்தார். இதனையே முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும் வலியுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்ததையடுத்து, இன்று காலை அவை கூடியதும், சபை தலைவர் வெங்கைய நாயுடு, சபை காவலர்களின் புதிய சீருடை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் ஆராயப்பட்டு பரீசிலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் சபை காவலர்களுக்கு மீண்டும் புதிய சீருடை வழங்கப்படுமா அல்லது பழைய சீருடையே வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.