உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ளது ஆனந்த் பவன், இது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த வீடாகும். தற்போது இந்த வீடானது, சோனியா காந்தியின் தலைமையிலான ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
‘குடியிருப்பு அல்லாத’ என்ற வகைப்படுத்தலின் கீழ் 2013ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தப்படவில்லை என்பதால் நகராட்சி நிர்வாக சட்டத்தின் கீழ் ஆனந்த் பவனுக்கு 4.35 கோடி ரூபாய் வரிபாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜ் நகராட்சி கமிஷனர் அலுவலகத்தின் தலைமை வரி மதிப்பீட்டு அதிகாரி பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஆனந்த் பவனுக்கு வரி பாக்கி தொடர்பாக மதிப்பிட்டோம், இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் எனவும் அழைப்பு விடுத்திருந்தோம், என்றாலும் ஆட்சேபனை எதுவும் வரவில்லை என்பதால் வரி நிர்ணயம் இறுதி செய்யப்பட்டு தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மிஸ்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மேயர் சவுத்ரி ஜிதேந்திரநாத் சிங் கூறுகையில், ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளையானது அனைத்து விதமான வரிகளிலிருந்தும் விலக்கு பெற்றுள்ளதால் ஆனந்த் பவனுக்கு வரி விதிக்க முடியாது என்றார். மேலும் இது தவறான வரிவிதிப்பு என்றும், இது சுதந்திர போராட்டத்தின் நினைவுச் சின்னம், மியூசியம் மற்றும் கல்வி மையம் என்றும் அவர் கூறினார்.
credit ns7tv