credit ns7.tv


தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அகமது பட்டேடல் ஆகியோர் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். மும்பையில் சவாண் மையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது என்று திட்டவட்டமாக கூறினார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 170 எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களது கூட்டணிக்கு இருந்ததாகவும் சரத்பவார் குறிப்பிட்டார். நேற்று நடந்த கூட்டத்தின்போது அஜித்பவார் வெளியேறியதாகக் கூறிய அவர், இன்று அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாக தெரிவித்தார். அஜித் பவாருடன் போகும் எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சித் தாவல் தடைச் சட்டம் இருப்பதையும், எம்எல்ஏ பதவியை இழக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அஜித்பவாரின் முடிவு கட்சிக்கு எதிரானது என்பதால், அவர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் பாஜக அரசியல் விளையாட்டை விளையாடி வருவதாகக் குற்றம்சாட்டினார். ஜனநாயகம் மீது பாஜக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளதாகம் அவர் விமர்சித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தேர்தலை ஏன் நடத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்ட்ரா பாஜகவிற்கு ஆதரவு அளிக்க அஜித் பவார் மிரட்டப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அஜித் பவாருடன் சென்ற 8 எம்.எல்.ஏக்களில் 5 பேர் திரும்பி வந்துவிட்டதாக கூறினார். பாஜகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாகவும் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.