ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், 3 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
தற்போது சிறையில் உள்ள போதிலும், முக்கியமான சாட்சிகளை தனது கட்டுப்பாட்டிலேயே ப. சிதம்பரம் வைத்திருப்பதாக அவர் கூறினார். ஜாமீன் வழங்கினால் நிச்சயம் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் துஷார் மேத்தா வாதிட்டார். அதிகாரத்தில் இருக்கும்போது ஒருவர் செய்த பொருளாதாரக் குற்றங்கள், மற்ற குற்றங்களைவிட மிகப் பெரியது என தெரிவித்த துஷார் மேத்தா, இது அமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் என குறிப்பிட்டார்.
எனவே, ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்றும், ஒருவேளை கொடுத்தால் அது ஒரு மோசமான உதாரணமாக அமைந்து விடும் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அமலாக்கத் துறை அளிக்க முன்வந்துள்ள சீலிடப்பட்ட 3 உறைகளை வாங்கி பத்திரமாக வைக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
credit ns7.tv