வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் லஞ்சம்...!


தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தங்கள் பணிகளைச் செய்ய 100ல் 62 பேர் லஞ்சம் கொடுத்தே செய்து முடித்திருப்பதாக ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்துள்தாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியா முழுக்க அரசு அலுவலகங்களில் லஞ்சம் வழங்குவது தொடர்பாக, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அரசு சாரா ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆப் இந்தியா என்ற அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது. 20 மாநிலங்களில் உள்ள சுமார் 1 லட்சத்து 90ஆயிரம் பேரிடம் கேட்கப்பட்ட வெளிப்படையான கருத்துக்களின் அடிப்படையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
இந்திய அளவில் அரசு அலுவலகங்களில் கடந்த அண்டு 56 சதவீதமாக இருந்த  லஞ்சம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 51 சதவீதமாக குறைந்திருந்திருக்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு லஞ்சம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகமாக லஞ்சம் கொடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6வது இடத்தில் இருக்கிறது. 
தமிழகத்தில் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 100ல் சுமார் 62பேர்  தங்கள் வேலையைச் செய்ய அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளர். இதில், 35% பேர் பல முறையும் 27% பேர் ஒரு முறை அல்லது இரண்டு முறை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு அதிகாரிகள் இந்த லஞ்சத்தை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆன்லைன் ஆக்கப்பட்டாலும்,  இந்த அலுவலங்களில் தான் அதிகபட்சமாக சுமார் 41 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் சுமார் 19 சதவீதம் பேரும், காவல்நிலையங்களில்  சுமார் 15 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதேபோல் மின்சார வாரியத்தில், மின்சார இணைப்பு பெறுவதற்கும், மின்சார கேபிளை பழுதுபார்க்கும்  தொழிலாளிக்கும் பணம் கொடுத்திருப்பதாகவும் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான், பீகார், உ.பி., தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிகளவு லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும்,  டெல்லி, ஹரியானா, குஜராத், மேற்கு வங்கம், கேரளா, கோவா மற்றும் ஒடிசா மாநிலங்களில் லஞ்சம் கொடுப்பது குறைவாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 
லஞ்சத்தை ஒழிக்க இந்தியா பாடுபட்டு வரும் அதேவேளையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் லஞ்சத்தை கட்டுப்படுத்த அரசின் சாட்டை சுழலுமா என்ற கேள்வியை முன்வைத்து காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.
credit ns7.tv