ஞாயிறு, 24 நவம்பர், 2019

ரிசார்ட் அரசியலை நோக்கி மகாராஷ்ட்ரா!


சற்றும் எதிர்பார்க்காத திருப்பமாக மகாராஷ்ட்ராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு இல்லை என அறிவித்து இருப்பது, மகாராஷ்ட்ராவில் ரிசார்ட் அரசியலுக்கு வழி வகுக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 
மகாராஷ்ட்ராவின் அரசியல் களமே அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு அடைந்து இருக்கிறது. பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் நீடித்து வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளியாக குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக இன்று காலை 8 மணிக்கு)) தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். நாடாளுமன்றத்தி மோடி சரத் பவாரை பாராட்டியது, அதன் பின் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர மோடியை சரத் பவார் தனியே சந்தித்தது. விவசாய பிரச்சனைகாக சந்தித்தோம் என குறிப்பிட்டாலும் அந்த சந்திப்பு தான் இந்த திடீர் அரசியல் மாற்றத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது. 
அஜித் பவாரின் முடிவு அவரின் தனிப்பட்ட முடிவு என்றும், தேசியவாத காங்கிரஸ் இதற்கு ஆதரவளிக்கவில்லை என சரத் பவார் உத்தவ் தாக்ரேவை உடனான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 10 பேர் மட்டுமே அஜித் பவாருக்கு ஆதரவாக உள்ளதாகவும், போலியான கையெழுத்தை காட்டி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 170 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக சரத் பவார் குறிப்பிட்டடுள்ள நிலையில், அஜித் பவாரின் பக்கம் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 
இந்த கேள்விக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்தாலே பதில் கிடைக்கும் என்ற போதிலும், சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் வைக்க கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய பிரதேசம் அல்லது ராஜஸ்தான் மாநிலத்தில் தங்க வைக்க முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் சிவசேனா எம்எல்ஏக்கள் மும்பையில் நட்சத்திர ஹோட்டலிலும், தேசியவாத காங்கிரசில், சரத்பவார் வசமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவை தொடர்ந்து, மகாராஷ்டிராவிலும் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்ள ரிசார்ட் அரசியலை, மீண்டும் கையில் எடுத்துள்ளன கட்சிகள்.

credit ns7.tv