ஞாயிறு, 17 நவம்பர், 2019

அதிர்ச்சியூட்டும் மத்திய அரசின் ஆய்வறிக்கை!


டெல்லி, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் குழாய் நீர், குடிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்ற அதிர்ச்சித்தகவல், மத்திய அரசின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.  
ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் வழங்க, மத்திய அரசு ஜல்ஜீவன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் கிடைக்கும் குழாய் நீரை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.இதன் 2 ஆம் கட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.  பரிசோதனை செய்யப்பட்ட 20 தலைநகரங்களின் நீரில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வழங்கப்படும் குழாய் நீர், எந்த சுத்திகரிப்பும் செய்ய அவசியமின்றி, தூய்மையான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இங்கு 10 இடங்களில் பெறப்பட்ட நீரின் மாதிரிகளில், 11 சோதனை முடிவுகளும், நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடு அளவீடுகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பானதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு நேர்மாறாக, நாட்டின் தலைநகரான டெல்லி, தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் குழாய் குடிநீர், நிர்ணயிக்கப்பட்ட 11 வகையான சோதனைகளில் பலவற்றில் தேர்ச்சி பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.குறிப்பாக, சென்னையில் 10 இடங்களில் எடுக்கப்பட்ட குழாய் நீரின் மாதிரிகளில், 11-ல் 9 சோதனை முடிவுகள், தரக்கட்டுப்பாடு அளவீடுகளை தாண்டி, குடிப்பதற்கு தரமின்றி உள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல் டெல்லி குழாய் குடிநீரும் பாதுகாப்பானதாக இல்லை என்றும் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.நீரின் மணம், குளோரைடு, புளுரைடு, அமோனியா போன்று ரசாயனங்களின் அளவுகள் குறித்த பரிசோதனைகளில், 13 மாநில தலைநகரங்களின் நீர் தரமின்றி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஆய்வறிக்கை முடிவுகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறிய ராம்விலாஸ் பாஸ்வான், நீரின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார்.

credit ns7.tv