பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை, உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
ரபேஃல் வழக்கில் பிரதமர் மோடியை, ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், இந்த ஒப்பந்தம் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாயை, அம்பானி திருடுவதற்கு பிரதமர் உதவி இருக்கிறார் என விமர்சித்திருந்த ராகுல், "காவலாளியே திருடன்" என மோடியை உச்சநீதிமன்றமே குறிப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து, பிரதமரை ராகுல் தரக்குறைவாக பேசுவதாக கூறி, பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே, தனது விமர்சனத்திற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராகுல் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும், வருங்காலத்தில் இதுபோன்று பேசக்கூடாது எனவும், ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
credit ns7.tv