கடந்த சில நாட்காளாக தமிழகத்தில் அதிகம் பேரால் உச்சரிக்கப்பட்ட பெயர். சிறுவயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர் பாத்திமா லத்தீப். பள்ளிப் படிப்பை முடிந்த உடன், ஐஐடியில் படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார் பாத்திமா லத்தீப். அவருக்கு உத்தரப்பிரதேச மாநிலம் பனாரசில் உள்ள ஐஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் நாட்டில் நடக்கும் கும்பல் தாக்குதல்களால் அச்சமடைந்த அவரது பெற்றோர், தனது மகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என சென்னையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஒரு வருடகாலமாக சிறப்பாக சென்ற பாத்திமா லத்தீப்பின் படிப்பிற்கு கடந்த ஒரு மாதமாக தொல்லைகள் எழ ஆரம்பித்துள்ளது. மத ரீதியான துன்புறுத்தல்கள் அவரை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. பெற்றோருடன் தினந்தோறும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்த பாத்திமா லத்தீப், கடந்த 28 நாட்களாக ஐஐடி வளாகத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை மறைத்தே வந்துள்ளார்... இருப்பினும் கொடுமைகள் உச்சம் தொட்டதால், அவ்வப்போது பெற்றோரிடம் புலம்பியுள்ளார். எனது பெயரை கூட சொல்ல முடியவில்லை என்னை தொந்தரவு செய்கிறார்கள் என சவுதியில் பணியாற்றி வந்த தனது தந்தையிடம் புலம்பி உள்ளார் மாணவி பாத்திமா லத்தீப்.
இந்த நிலையில் தான் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் தனது தந்தையிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் அழுதுள்ளார். வழக்கமாக காலை 5 மணிக்கு எழுந்து விடுவது பாத்திமாவின் வழக்கம். ஆனால் கடந்த 9ம் தேதியன்று 11 மணி வரை பாத்திமா லத்தீப்பிடம் இருந்து போன் வராததால் அவருடைய தாய் சஜிதா, சக கேரள மாணவிகளுக்கு போன் செய்துள்ளார். இதோ பார்த்து விட்டு வந்து பேசுகிறேன் என கூறிய தோழிகள் யாரும் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
மீண்டும் மீண்டும் போன் செய்தும் பாத்திமா லத்தீப் தாய் சஜிதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒரு வழியாக மகள் இறந்து விட்டாள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து கேரள அரசியல்வாதி ஒருவருடன் பாத்திமாவின் சகோதரி ஆயிஷா சென்னை வந்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். தான் அரசியல்வாதி என்றும் கேரளாவில் மேயர் என்றும் தெரிவித்த பின்னர் தான் வழக்கை பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
இந்த நிலையில் சிதறி கிடந்த மாணவி பாத்திமா லத்தீப்பின் மொபைல் போனை அவரது தங்கை ஆயிஷா எடுத்துள்ளார். போன் சார்ஜின்றி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. போனை சார்ஜ் செய்து பார்த்த போது வால்பேப்பரில், எனது மரணத்திற்கு காரணம் சுதர்சன் பதமநாபன் என்ற பேராசிரியர் என குறிப்பிட்டிருந்தார் மாணவி பாத்திமா லத்தீப். மற்ற விவரங்கள் தனது சாம்சங் கேலக்சி நோட்டில் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார் பாத்திமா லத்தீப்.
28 நாட்களாக பெற்றோரிடம் மறைத்து வைத்திருந்த அனைத்து விவரங்களையும் தனது கேலக்சி நோட்டில் பதிவு செய்து வைத்துள்ளார் பாத்திமா லத்தீப். மாணவி பாத்திமா இறந்த அன்று ஒரு போன் செய்து கூட யாரும் தங்களுக்கு தகவல் அளிக்கவில்லை என்கின்றனர் அவரது பெற்றோர்.
6 பக்கங்களுக்கு சாட்சிகள் உள்ளன. அதில் பலருடைய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை போராடுவோம் என்பது தான் பாத்திமாவின் பெற்றோரின் நிலைப்பாடு.
குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். இனிமேல் ஒரு பாத்திமா மரணிக்க கூடாது என்ற கண்ணீர் வடிக்கிறார் அவரது தாயார் சஜிதா
பெரிய கனவுகளோடு சென்ற மகளின் கனவுகளை தகர்த்து அவளை இல்லாமல் செய்துவிட்டனர். நீதித்துறையின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது என்ற பாத்திமா லத்தீப்பின் தாயார் வார்த்தைகளில் உள்ள நம்பிக்கை தான் ஜனநாயக தேசத்தில் சிறுபான்மையினருக்கு அரசு அளிக்க வேண்டிய நம்பிக்கை.
credit ns7.tv