வியாழன், 14 நவம்பர், 2019

முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.


சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கு, ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கு ஆகிய முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும், பாஜகவினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, சீராய்வு மனுக்கள் உட்பட சுமார் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 
சபரிமலை வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
இதேபோன்று, ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட மறுத்ததை, மறுஆய்வு செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, ரஃபேல் வழக்கில் தீர்ப்பளிக்கிறது. 
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட அவதூறு வழக்கிலும், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அதற்குள் முக்கிய வழக்குகளில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

credit ns7.tv