credit ns7.tv
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேசபக்தர் என கூறியதற்காக பாரதிய ஜனதா எம்பி பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கோரினார்.
மக்களவையில் பேசிய பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்தார். பெரும் சர்ச்சையை அவரது கருத்துக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக சார்பிலும் பிரக்யா தாக்கூருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று மக்களவை கூடியதும், பிரக்யா தாக்கூர் விவகாரம் மீண்டும் வெடித்தது.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. அப்போது அவையில் இருந்த பிரக்யா சிங் தாக்கூர், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். தமது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக தான் மன்னிப்பு கோருவதாக கூறினார். தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தம்மை ஒரு உறுப்பினர், எந்த ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதி என குறிப்பட்டதாகவும், இந்த கருத்து தமது கண்ணியத்தை குறைப்பதாகவும் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்தார்.
ஆனால் மீண்டும் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் எம்பி-க்கள், பிரக்யா சிங் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவையில் குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இந்த செய்தி உலகம் முழுவதும் பரவி விட்டது என்றும், இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக பிரக்யா தாக்கூருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மகாத்மா காந்தி வேடமிட்டு பிரக்யா தாக்கூருக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.