credit ns7.tv
மாசில்லா சென்னையை உருவாக்கும் நோக்கில், பெசன்ட் நகர் கடற்கரையில், கார் இல்லா ஞாயிறு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
டெல்லியில் காற்று மாசு காரணமாக, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய நிலை சென்னைக்கு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், காற்று மாசை கட்டுப்படுத்த, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை நகர போக்குவரத்து காவல்துறை, மற்றும் தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளையுடன் இணைந்து, "கார் இல்லா ஞாயிறு" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை 6 முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, பெசன்ட் நகரில் சுமார் 800 மீட்டர் பரப்பளவு வரை, மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோல் கார் இல்லா ஞாயிற்றுக்கிழமைகளை, பொது மக்கள் அதிகளவில் செயல்படுத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
கார் இல்லாத ஞாயிற்றுக் கிழமைகளை, பொதுமக்கள் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்த, பல விளையாட்டு மற்றும் குழு நடவடிக்கைகள், சாலையோர விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், இசை மற்றும் நடன கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இவ்வாறு கார் இல்லா ஞாயிற்றுக்கிழமை, சென்னை முழுவதும் மட்டுமின்றி. பிற நகரங்களிலும் பரவலாக கடைபிடிக்க வேண்டும், என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.