மோட்டார் வாகனச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 577 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கவும், சாலை விதிகளை மீறுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்தச்சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 577.5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன சட்டத்தில் சில விதிகள் திருத்தப்பட்டு, கடந்த செம்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு சுமார் 38 லட்சத்து 39 ஆயிரத்து 406 அபராத சலான்களை வழங்கியிருப்பது இந்த புள்ளி விபரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. தேசிய தகவல் மைய தரவுத்தளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியுள்ள தமிழகத்தில் மட்டும் இந்த 3 மாதங்களுக்குள் சுமார் 14 லட்சத்து 13 ஆயிரத்து 996 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 27 கோடியே 75 லட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான அபராத சலான்கள் வழங்கியிருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. 58 சலான்கள் மட்டுமே வழங்கப்பட்டு, வெறும் 7 ஆயிரத்து 800 ரூபாய் மட்டுமே அபராத்தொகையாக வசூலிக்கப்பட்டிருப்பதால், குறைந்த சலான்கள் வழங்கிய மாநிலமாக கோவா இருக்கிறது.
credit ns7.tv