வியாழன், 28 நவம்பர், 2019

RSS, பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான் பிரக்யா கூறியுள்ளார்: ராகுல் காந்தி

credit ns7.tv
Image
மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்றே பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் கருதுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 
எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்திருத்தம் குறித்த விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு நாதுராம் கோட்சே தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி பேசினார். காந்தி ஒருசார்பு கொள்கையை கொண்டவர் என்பதால் 32 ஆண்டுகளாக அவர் மீது வஞ்சம் கொண்டிருந்ததாகவும், அதனால் காந்தியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் கோட்சே தெரிவித்ததாக ஆ.ராசா கூறினார். 
இதற்கிடையே ஆத்திரத்தில் குறுக்கிட்டு பேசிய பாஜக எம்பி பிரக்யா தாகூர், இந்த விவகாரத்தில் தேசபக்தரை குறிப்பிட்டு பேச வேண்டாம் என தெரிவித்தார். பிரக்யாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரக்யாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் குரல் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட சபாநாயகர் ஓம் பிர்லா சமரசம் செய்தார்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான் பிரக்யா தாகூர் கூறியுள்ளார் என தெரிவித்தார். இதை அவர்கள் மறைக்க முடியாது எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். பிரக்யா தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.