சனி, 16 நவம்பர், 2019

ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பரபரப்பு குற்றச்சாட்டு

Image
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணம் தற்கொலை போன்று தெரியவில்லை என்று அவரது தந்தை அப்துல் லத்தீப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 
சென்னை டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகள் இறப்புக்கு ஐஐடி சார்பில் இதுவரை யாரும் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். தனது மகள் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஐஐடி நிர்வாகம் வழங்க மறுப்பதாக ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் புகார் கூறியுள்ளார். 
ஃபாத்திமா லத்தீப் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிப்பதாக தமிழக டிஜிபி உறுதியளித்துள்ளதாகக் கூறிய அப்துல் லத்தீப், தமிழக காவல்துறை மீது நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். ஃபாத்திமாவின் மரணத்திற்கு முழுக்காரணம் பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் தான் என்றும் அப்துல் லத்தீப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் சந்தித்து புகார் மனு அளித்தார். தனது மகள் மரணத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv