சனி, 16 நவம்பர், 2019

உள்நோக்கத்தோடு மாற்றப்பட்டாரா மாநில தேர்தல் ஆணைய செயலாளர்?


Image
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளரை தமிழக அரசு அதிரடியாக மாற்றியது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அடிக்கடி அவகாசம் கேட்டாலும் எப்படியாவது அடுத்தமாதத்திற்குள் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடும் என்கிற நம்பிக்கையில்  தமிழகத்தின் கட்சிகள் எல்லாம் பரபரப்பாக வேலையைத் தொடங்கியிருக்கின்றன.
இந்த சூழலில் மாநில தேர்தல் ஆணைய செயலாளரான ஆர். பழனிசாமியை  மாற்றியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியதில் உள்நோக்கம் இருக்கிறது என சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார் ஸ்டாலின். கூடவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு விசுவாசமாகப் பணியாற்றிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமித்திருப்பது உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடவா அல்லது உள்ளாட்சித் தேர்தலில் தில்லு முல்லுகள் செய்யவா என்று கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.
இந்த இடத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாது என்கிற தொணியிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் வரை பேசிவருவது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. இதற்கிடையில்  தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றப்பட்டது சாதாரண நடவடிக்கைதான் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் கூறினாலும் அந்த சாதாரண நடவடிக்கையை தற்போது மேற்கொள்ளவேண்டிய அவசியம் என்ன வந்தது என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
மேலும் தேர்தல் செயலாளருக்கும் தேர்தல் ஆணையருக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின் என்கிற அமைச்சர் செல்லூர் ராஜூவின் கூற்றுப்படி தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றத்தால் எந்த தாக்கத்தையும் தேர்தலில் ஏற்படுத்த முடியாதா? அது உண்மையென்றால் ஸ்டாலின் தாமாக பதட்டப்பட்டு மக்களையும் பதட்டப்படுத்துகிறாரா என்று விவாதிக்கத் தூண்டுகிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே ஸ்டாலின் அதிமுக மீது வைத்த குற்றச்சாட்டை அப்படியே திருப்பி ஸ்டாலின்தான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயல்கிறார் என்று பேசியிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
கூடவே உள்ளாட்சி தேர்தலை நிறுத்த எந்த வேலையும் செய்யவேண்டாம் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்வதாக ஸ்டாலினிடம் வேண்டுகோளும் விடுத்திருகிறார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் ஆளுங்கட்சியினர் கெஞ்சும் வித்தியாசமான அரசியல் சூழலை விவாதிக்கவேண்டியது அவசியமாகிறது. 
credit ns7.tv