புதன், 13 நவம்பர், 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது!

மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிர மாநிலத்தில், பாஜக - சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக, ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை அக்கட்சி நிராகரித்தது. இதனையடுத்து சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். சிவசேனா தலைமையில், ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 
இதை ஏற்பது குறித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இவ்வாறு மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில், கடந்த 3 வாரங்களாக குழப்பம் நீடித்த சூழலில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பகத்சிங் கோத்யாரி பரிந்துரை செய்தார். இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மகாராஷ்டிராவில் இன்று குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே, குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில், அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

credit ns7.tv