வெள்ளி, 20 டிசம்பர், 2019

டெல்லி, பெங்களூரு, லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

Image
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், டெல்லி, பெங்களூரு, லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. மாணவர்கள் மீதான போலீஸாரின் அடக்குமுறையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்குவங்கம், அஸ்ஸாம், கேரளா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில், கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். 
பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி செங்கோட்டையை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
இதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், பெங்களூரு நகர் முழுவதும் வரும் 21ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என்று பெங்களூரு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று கூறியுள்ள காவல்துறையினர், இயல்பு வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். 
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்ட நிலையில், அதுதொடர்பான போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுஇடங்களில் அனுமதியின்றி மக்கள் கூடுவதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். 

credit ns7.tv