credit ns7.tv
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உத்தரபிரதேசத்தில் கலவரத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, டெல்லி, உத்தரபிரதேசம், அஸ்ஸாம், மேற்குவங்கம், பீகார், மகாராஷ்ட்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. ராம்பூரில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே மூண்ட மோதல், சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கல்வீச்சில் போலீசார் தாக்கப்பட்ட நிலையில், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
கலவரத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் கருத்துக்களை பதிவிட்டதாக, 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாகல்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர், ஆட்டோக்களை சேதப்படுத்தியதுடன் வன்முறையில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.