2020ம் ஆண்டினை ''20'' என சுருக்கி குறிப்பிடுவதால் மோசடிகள் அரங்கேற வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அவ்வாறு மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதா?
வங்கி ஆவணங்கள் மற்றும் சில விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது பெரும்பாலோர் ஆண்டின் 4 இலக்கங்களையும் குறிப்பிடுவதில்லை. குறிப்பாக ''2019'' ஆண்டினை குறிப்பிடும் போது, பெரும்பாலானோர் ''19'' என மட்டுமே எழுதுவது உண்டு. ஆனால், இதேபோன்று 2020ம் ஆண்டினை ''20'' என சுருக்கி எழுதும் போது, அதை மாற்றி எழுதி முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறது ஒரு தகவல்.
அதே நேரத்தில் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், அரசாணை முதல் பத்திரப்பதிவு ஆவணங்கள் வரை, ஆண்டினை குறிப்பிடும் போது அதை சுருக்கி எழுத முடியாது என்கிறார், முன்னாள் கூடுதல் பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார். பத்திரப்பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை முழுமையாக மட்டுமே குறிப்பிட முடியும் என்பதால், மோசடிக்கு வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
எனினும், தனிநபர் அனுப்பும் கோரிக்கை கடிதங்கள், பணி விண்ணப்பங்களில் 2020ம் ஆண்டுக்கான இலக்கத்தை சுருக்கி ''20'' என குறிப்பிடும் போது, அதை மாற்றி எழுதி மோசடி செய்ய அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கின்றனர் சட்ட வல்லுநர்கள். மொத்தத்தில், இலக்கங்களை சுருக்காமல் 2020 என விரிவாக எழுதினால், எந்த மோசடிக்கும் இடமளிக்காமல் தவிர்க்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
credit ns7,tv