வெள்ளி, 20 டிசம்பர், 2019

பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!


பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்துள்ள பம்மல் நகராட்சியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பிரதான சாலையில் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தாமாக முன்வந்து விசாரித்தது நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமையிலான தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய அமர்வு. 
இதில் பம்மல் நகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்கள், செய்தியை பார்த்ததும் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பம்மல் நகராட்சி ஆணையர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த குழு பம்மல் சுற்று வட்டாரத்தில் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் கொட்டப்படுகிறதா? எனவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி ஆணையிட்டார்.
credit ns7.tv