credit ns7.tv
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவி தங்க பதங்கத்தை வாங்க மறுத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தங்கப்பதக்கத்தை தாம் வாங்க போவதில்லை என முதுகலை மக்கள் தொடர்பியல்துறை மாணவி ரபியா நேற்றே அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த மாணவி ரபியா, விழா அரங்குக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் புறப்பட்டு சென்ற பின்பே மாணவி ரபியா விழா அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக துணை வேந்தர், மாணவி ரபியாவுக்கு பட்டமும், தங்கப்பதக்கமும் வழங்கினார். அப்போது பட்டத்தை பெற்றுக் கொண்ட மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.
குடியரசுத் தலைவர் இருக்கும் போது விழாவுக்கு அனுமதிக்காமல் தம்மை அவமதித்துவிட்டதாக மாணவி ரபியா புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். குடியரசுத் தலைவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில், இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை சட்டதிருத்த மசோதவை திரும்ப பெற கோரி பல்கலை கழக மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் குடியரசு தலைவர் தங்கியிருந்த ஆளுநர் மாளிகை முன்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.