புதன், 18 டிசம்பர், 2019

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு இத்தாலியில் கண்டுபிடிப்பு!

credit : news 7 tv
Image
இத்தாலியின் பிரிண்டிசி (Brindisi) நகரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி 50,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.  
பிரிண்டிசி  (( Brindisi)) நகரில் உள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு தென்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1941ம் ஆண்டு அந்த வெடிகுண்டை பிரிட்டிஷ் படையினர் வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. செயலிழக்கப்படாத அந்த வெடிகுண்டு ஒரு மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடனும் இருந்தது. பெரும் அச்சுறுத்தலாக இருந்த வெடிகுண்டை செயலிழக்க நிபுணர்கள் முடிவு செய்தனர். 
வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன. 54,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பிரிண்டிசி விமான நிலையம், ரயில் நிலையம், 2 மருத்துவமனைகளும் மூடப்பட்டன. பிரிண்டிசி சிறையில் இருந்த 200 கைதிகள், அருகே உள்ள லீசி சிறைக்கு மாற்றப்பட்டனர். 
 
முன்னெச்சரிக்கை பணிகள் முடிவடைந்த நிலையில், சுமார் 40 நிமிடங்களுக்கு பின் வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
உலகப்போர் காலத்தில் வீசப்பட்டு செயலிழக்காமல் இருக்கும் வெடிகுண்டுகள், இத்தாலிக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. கடந்த 1ம் தேதி துரின் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர். 
 
தற்போது, உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மற்றொரு வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.