திங்கள், 16 டிசம்பர், 2019

வெங்காயத்தின் விலை உயர்வு, கர்நாடக விவசாயி ஒருவரை ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

நாடு முழுவதும் ஜெட் வேகத்தில் உயர்ந்த வெங்காய விலை உரிக்காமலேயே கண்ணீரை வரவழைத்தது. இது ஒருபுறமிருக்க வெங்காய விலை உயர்வு கர்நாடக விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது. தொட்டசித்தவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன், நடப்பாண்டில் 20 ஏக்கரில் வெங்காய சாகுபடி செய்திருந்தார்.
15 லட்சம் ரூபாய் செலவிட்ட நிலையில், 10 லட்சம் ரூபாய் லாபத்தை எதிர்பார்த்திருந்தார். ஆனால் எதிர்பாராமல் கிடுகிடுவென உயர்ந்த வெங்காய விலை உயர்வு அவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்த மல்லிகார்ஜூன், அதன் மூலம் ஒரே மாதத்தில் ஒரு கோடி வரை லாபத்தை ஈட்டியுள்ளார்.
நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு குவிண்டால் வெங்காயம் 7,000 ரூபாய்க்கு விற்றதாகவும், இரண்டாவது வாரத்தில் விலையானது 12,000 ரூபாய் உயர்ந்ததாகவும் விவசாயி மல்லிகார்ஜூன் கூறியுள்ளார். வெங்காய சாகுபடி மூலம் கிடைத்த லாபத்தில் 15 லட்சம் ரூபாய் கடனை அடைத்ததாகவும், புதிய வீடு ஒன்றை கட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது நிலத்தில் வெங்காய திருட்டு நடைபெறாமல் இருக்க இரவு பகலாக குடும்பத்துடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விவசாயி மல்லிகார்ஜூன் புன்சிரிப்புடன் கூறினார். 
Image
credit ns7.tv