திங்கள், 16 டிசம்பர், 2019

"உயர்மட்ட விசாரணை வேண்டும்" - ஜாமியா பல்கலை துணைவேந்தர்

credit ns7.tv
Image
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார். 
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த போலீஸார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையில் பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஜாமியா பல்லைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீஸாருக்கு, அப்பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நடந்தது துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அவர், பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்திவிட்டதாக கவலை தெரிவித்தார். அதனை எவ்வாறு ஈடு செய்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், வன்முறை சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று துணைவேந்தர் வலியுறுத்தினார். 
வன்முறையினால் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறிய துணைவேந்தர், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்திருப்பதை உறுதி செய்தார். இதனிடையே,  டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவியதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 6 தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது